Tuesday, January 24, 2006

128: *நட்சத்திரம்* - வள்ளல் வாஸுதேவன்

நாயகி சுவாமிகள் சௌராஷ்ட்ரத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

வள்ளல் வாஸுதேவன் நாமம்
தெள்ளமிர்தம்; உள்ளே கொண்டால்
கொள்ளைக்காரன் வரமாட்டான்; வந்தாலும்
கொள்ளைக்கிடமில்லாமல் போவான்.

முதலில் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. இரண்டாவது தடவை படித்தபின் புரிந்தது.

வசுதேவரின் புதல்வனான வாசுதேவன் மாபெரும் வள்ளல். கேட்டதெல்லாம் கொடுப்பான். அவன் கூடத் தேவையில்லை. அவனுடைய நாமமே போதும். அதுவே வள்ளல். வள்ளல் வாசுதேவ நாமம். பிறவிப் பிணியையும் அந்த நாமம் நீக்கும். அதனால் அது தெளிந்த அமிர்தம். அதனை நாம் உட்கொண்டுவிட்டால், நம் உயிரைக் கொள்ளைக் கொள்ளும் கொள்ளைக்காரனான காலன் வர மாட்டான். பிறவா நிலை அடைவோம். அப்படியே அவன் வந்தாலும் கொள்ளை கொள்வதற்கு எதுவும் இல்லாமல் போவான். கண்ணன் நாமத்தை நாம் உட்கொண்டவுடன் நம் உயிர் அவனைச் சேர்ந்துவிடுகிறதே. அப்புறம் எமனுக்கு என்ன கிடைக்கும்?

அற்புதமான நாலு வரிப் பாடல் இது.