Tuesday, January 02, 2007

கண்ணன் எப்போது வருவானடி??



இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள். மாதங்களின் நான் மார்கழி என்றான் கண்ணன் கீதையில். ஒவ்வொரு மாதத்திலும் மதிநிறைந்த நன்னாள் (பௌர்ணமி) எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அதைக் கொண்டு தான் மாதங்களின் பெயர்களை வைத்திருக்கிறார்கள். மார்கழியில் மதி நிறைந்த நன்னாள் மிருகசீருஷ நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வடமொழியில் மார்கழிக்கு மார்க்கஸீருஷம் என்று பெயர். கண்ணனும் கீதையில் 'மாஸானாம் மார்க்கஸீர்சோஹம்' என்கிறான்.

இந்த நன்னாளில் தான் மதுரையின் ஜோதி எனப் போற்றப்படும் ஆண்டாளின் அவதாரம் நவ யுக ஆழ்வார் நடனகோபால நாயகி சுவாமிகள் அவதரித்தார். இந்த நன்னாளில் சுவாமியின் பாடல் ஒன்றை பதிக்க வேண்டும் என்று சிவமுருகன் விரும்பி மின்னஞ்சல் அனுப்பினார். கரும்பு தின்னக் கசக்குமா? உடனே பாடலைப் பதிக்கிறேன்.


சுவாமிகள் நாயகி கோலத்தில்

கண்ணன் எப்போது வருவானடி கலந்து சுகம் பெறவே
நண்ணிய இத்துன்பவினை நாசமதாய் அறவே (கண்ணன்)

எண்ணம் அறிந்தது போலே இன்பம் ஈவானோடி? - ஆ
எண்ணம் இழுத்துக் கொண்டு நம்மோடிருப்பான் கூடி (கண்ணன்)

எண்ணம் இங்கெங்கே இருக்கு? இருடிகேசன் மேலே
எண்ணத் தரமோ அவன் தன் லீலைகள் நம்மாலே (கண்ணன்)

விண்ணவர்களுக்கு அமுதம் விரும்பித் தந்தானேடி
அண்ணலேடி நமக்கு இனிமேல் ஆரேடி போடி (கண்ணன்)

ஐயன் திருவடி பணிவார் அவரே நங்கள் தெய்வம்
பொய்யல்ல மெய் ஈதறிவாய் போயழை நாம் உய்வம் (கண்ணன்)

ஏடி விட்டுப் போனான் இங்கே என் செய்வேன் சந்திர முகியே
போடி அவன் எங்கேயோ நீ போய் அழை என் சகியே (கண்ணன்)

வயிறெரியுது எங்ஙனம் போய் எவரிடத்தில் விழுவேன்
இயம்பிய வார்த்தைகளை நான் எங்ஙனம் சொல்லி அழுவேன் (கண்ணன்)

பொய் உரைப்பானோ உரையாய் பொன்னரங்கன் எம்பால்
பையரவின் மேல் நடித்த பாதனேடி அன்பால் (கண்ணன்)




நடித்த திருவடி பணிந்து நங்காய் அழை போடி
முடித்த முடி அவிழ்த்திட யாரால் முடியும் போடி (கண்ணன்)

கண்ணீர் ஆறாய் பெருக அவன் காணாது சென்றானே
பண்ணிய தவப்பயனோ பரதவிக்கின்றேனே (கண்ணன்)


இராகம்: புன்னாகவராளி
தாளம்: ரூபகம்
பாடலை டி.எம்.எஸ். பாடிக் கேட்க இங்கே சொடுக்குங்கள்.