Monday, June 15, 2009
திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்
இராமானுசன் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆழ்வார் ஆசாரியார் திருவடிகளே தஞ்சம் என்றும் ஆண்டாள் திருவடிகளே தஞ்சம் என்றும் இறைவனைச் சரணடைவது போலவே இறையடியார்களையும் சரணடைவது முன்னோர் காட்டிய வழி. அந்த அடியவர்கள் காட்டிய வழி திருமகளான அன்னையை முன்னிட்டு எம்பெருமானைச் சரணடைவது. 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா' என்று தொடங்கியே 'உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே' என்றார் நம்மாழ்வார். அதே போல் நாயகி சுவாமிகளும் இந்தப் பாடலில் 'திருமங்கை மார்பன்' என்று தொடங்கி 'நீலமேகன் தஞ்சம்' என்றும் 'கோவலன் தாள் தஞ்சம்' என்று தஞ்சமடைந்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அவனைத் தஞ்சம் அடைவதை விட அவனடியார்களைத் தஞ்சம் அடைவதே சரி என்று எண்ணி 'நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம்' என்று அடியார்களைத் தஞ்சமடைந்து இந்தப் பாடலை நிறைவு செய்கிறார்.
திருமங்கை மார்பன் திருமலைகள் ஏழுடையோன்
திருவரங்கத் தலமுடையோன் திருப்பதிகள் உடையோன் (திரு)
அருளே உருவான திருமங்கை யான மகாலட்சுமி தாயார் வாழும் மார்பை உடையவன் அவன். அவ்வருளின் வெளிப்பாடாக தன் திருவடிகளைத் தஞ்சமடைவதே உயிர் உய்ய வழி என்று காட்டிக் கொண்டு பொறுமையாக நிற்கிறான் திருமலைகள் ஏழும் உடையவனான திருவேங்கடத்தான். மலையேறி வந்து அவனைச் சரணடைய இயலாதவர்களுக்கு காவிரி கொள்ளிடம் என்னும் இரு ஆறுகளின் இடைக்குறையில் திருவரங்கத்தலமுடையோனாக நிலை கொண்டுள்ளான். இங்கெல்லாமும் சென்று அவனைத் தஞ்சமடைய முடியாதவர்களுக்கு தன் திருமேனியைப் பல திருப்பதிகளிலும் நிலை நிறுத்தியிருக்கிறான். அவனது அருளினையும் நீர்மையினையும் என்ன சொல்ல?
திருமங்கை மார்பன் என்றதால் அவனது பர உருவம் சொன்னார். திருப்பதிகளைக் குறித்ததனால் அவனது அருச்சை என்னும் சிலையுருவைச் சொன்னார்.
திருவவதாரம் ஈரைந்தும் செகதலத்தில் செய்தோன்
திருப்பாற்கடலைக் கடைந்து அமுத மழை பெய்தோன் (திரு)
யானையை யானைய்க் கொண்டு பிடிப்பது போல உலக உயிர்களை அவ்வுயிர்களின் தோற்றமே கொண்டு தான் நல்வழிப்படுத்த வேண்டும் என்று அவனது அருளின் திறத்தால் ஈரைந்து = பத்து திருவவதாரங்கள் இந்த பூமியில் செய்தான். இதனால் இறைவனின் விபவ உருவம் சொன்னார்.
திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது ஆமையாகவும் மோகினியாகவும் உருக்கொண்டு அமுத மழையைப் பெய்தான். இறைவனின் வியூஹ உருவத்தைத் திருப்பாற்கடலைச் சொன்னதன் மூலம் சொன்னார்.
திருக்கைகளாலே சிவன் தன் வில் இரண்டாய் உடைத்தோன்
திருமகளாகிய சீதாதேவியின் கை பிடித்தோன் (திரு)
இராமனாக அவதரித்த போது தன்னுடைய திருக்கைகளால் சிவதனுசினை இரண்டாக உடைத்து திருமகளே ஆன சீதாதேவியின் திருக்கைகளைப் பிடித்தவன்.
கோவர்த்தனம் ஏந்திய கையன் கோபால துய்யன்
ஆபத்து தீர்த்தருளிய நம் ஆயர் குலத்து ஐயன் (திரு)
கடும் மழை பெய்த போது 'குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்'. கோவர்த்தனம் ஏந்திய கைகளை உடையவன். பசுக்களைக் காப்பவன் - கோபாலன். தூயவன். ஆயர்குலத்திற்கு நேர்ந்த ஆபத்துகளை தீர்த்து அருளிய நம் ஆயர் குலத்துத் தலைவன்.
அங்கத்துடனே சகல ஆக்கைகள் உண்டாக்கும்
பங்கயத்து அயன் பணியும் பரமன் என்னைப் பார்க்கும் (திரு)
கைகால்கள் என்னும் எல்லா அங்கங்களுடன் உலகில் எல்லா உடல்களையும் உருவாக்கும் தாமரையில் வாழும் பிரம்மன் பணிகின்ற பரமன். என் மேல் கருணையுடன் பார்ப்பவன்.
சேலையை நீக்கி என்னைச் சேரும் சீலனைப் பாராய்
ஆலைக் கரும்பு அது போல நான் ஆனேன் அல்லல் தீராய் (திரு)
இது வரையில் தானான நிலையிலேயே பாடி வருகிறார் போலும் என்ற எண்ணம் தோன்றும் வகையில் பாடி வந்த நாயகி சுவாமிகள் இந்தத் தொடுப்பில் தான் நாயகியாகவே பாடி வருவதை மிக அழகாகக் காட்டிவிட்டார்.
எனக்கும் அவனுக்கும் இடையில் இருக்கும் தடைகளை எல்லாம் (என் முயற்சியில்லாமல்) அவனாகவே நீக்கி என்னைச் சேர்ந்திடும் சீலன் அவன். இப்போது அவனைப் பிரிந்து பிழியப் பட்ட கரும்புச்சக்கையைப் போல ஆனேன் என் அல்லலைத் தீராய்.
அவரவர்கள் எண்ணம் போல் அநுக்கிரகங்கள் செய்யும்
சிவனுடைய செங்கையின் சிரமம் அதைக் கொய்யும் (திரு)
நான்குவிதமானவர்கள் என்னை வணங்குகிறார்கள்; அவர்கள் வேண்டியதை அவர்களுக்கு அருளுகிறேன் என்றான் கண்ணன். அதனைச் சொல்கிறார் இங்கே. அவரவர்கள் வேண்டியபடி அவர்களுக்கு அனுக்கிரகங்களைச் செய்பவன். பிரம்மனின் தலையைக் கொய்த சிவபெருமானின் பிரம்மஹத்தி நீங்கி அவர் திருக்கரங்களில் ஒட்டியிருந்த காபாலம் விலகும்படி அருளியவன்.
துக்கங்களுக்கு இருப்பிடமாய்த் துலங்குதே என் நெஞ்சம்
நிற்க வைக்கக் கூடவில்லை நீலமேகன் தஞ்சம் (திரு)
உலகத்தில் இருக்கும் துக்கங்களுக்கெல்லாம் ஒரே இருப்பிடம் போல் ஆகிவிட்டது என் உள்ளம். ஒரு நிலையில் நிறுத்த முடியவில்லை நெஞ்சத்தை. நீலமேகனே நீயே கதி.
நீவாத தீபமென முன்னின்றதே என் நெஞ்சம்
கோவர்த்தனக் குடை பிடித்த கோவலன் தாள் தஞ்சம் (திரு)
தூண்டிவிடாத விளக்கினைப் போல் ஒளிமங்கிக் கிடக்கிறதே என் நெஞ்சம். ஆயர்கள் துன்பம் தீர்க்கக் கோவர்த்தனக் குடை பிடித்த கோவலனே. நீயே தஞ்சம்.
ஆற்றங்கரைத் தீபமென அலைகுதே என் நெஞ்சம்
நாத்தழும்பேறத் துதிக்கும் நல்லவர் தாள் தஞ்சம் (திரு)
ஆற்றங்கரைக் காற்றில் அலைபாயும் விளக்குச்சுடரைப் போல் அலைகிறது என் நெஞ்சம். நாத்தழும்பேற அவன் திருப்பெயர்களைச் சொல்லித் துதிக்கும் நல்லவர்களின் திருவடிகளே தஞ்சம்.
இந்தப் பாடலை திரு. தொ.மீ. சௌந்தரராஜன் பாடி இங்கே கேட்கலாம்.
நாயகி சுவாமிகள் திருவடிகளே தஞ்சம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment