கடந்த 1994-ல், ஸ்ரீமந் நாயகி ஸ்வாமிகளின் ஒரு தமிழ் பாடலை முதல் முறையாக கேட்டேன். அப்பாடல் மிகவும் பிடித்து போக எல்லா கீர்த்தனங்களையும் படித்தும், கேட்டும் ஆனந்தித்தேன். அந்த பாடலை இங்கே பதிக்கிறேன்.
மாதவனடியாரை மனம்நோகப் பண்ணினால்
மாடாடு ஜென்மம் மருவும் (மாதவனடியாரை)
அனுபல்லவி
பாதகம்வேறில்லை யாதவனடியாரை
பழித்திடுவதுதான் கருவம் (மாதவனடியாரை)
சரணங்கள்
எப்பாவங்களும் தீரும் அப்பன் கோவிந்தனடியாரை இகழ்ச்சியாய்ப் பேசும்
இப்பாவந் தீராது எப்போதும் நரகத்தில் இருக்கும்படி நேரும் மோசம் (மாதவனடியாரை)
கிடைக்குமோ மானிட ஜென்மம் கிடைத்ததற்கு அடைவது இதுதானோ சொல்வீர்
முடவனாய்ப் பிறந்தாலும் தடையில்லை மோக்ஷத்திற்கு முகுந்தனுடைய நாமம் சொல்வீர் (மாதவனடியாரை)
வீடைந்தோமென்றே மாந்திடவேண்டாம்ஓய் வெறுவாய் வெகுளி வார்த்தை பேசி
கேடடைந்தது போதாதோ இனிமேலும் கதிபெறப் பாருங்கள் வாசி (மாதவனடியாரை)
விடத்துக்கொப்பான மாய்கை இடத்திலகப்பட்டு வீணாகக் காலம் போக்குகின்றீர்
வடபத்ராரியர் போற்றும் நடனகோபாலன் நாமம் உரைப்பீர் வைகுந்தம் சேர்வீர் நன்றே (மாதவனடியாரை)
மாதவனான அந்த வைகுண்டவாசனை, நாராயணனனை தெய்வமாக எண்ணி தொழுபவர்களை, மனம் நோக வைத்தால் என்ன நேரும் என்று எச்சரிக்கும் விதமாகவும், சத் பதவிகளான வைகுண்ட வாசமும், பரமபதமும், கிடைக்க வழிசொல்லும் விதமாகவும் அமைந்துள்ள பாடல்.
எந்த பாவங்களை செய்தாலும் அது தீர்ந்து விடும், அல்லது அது தீர ஒரு பரிகாரம் கிடைத்துவிடும் ஆனால், அவனடியாரை பழிப்பது போன்ற பாவம் தீர்வதற்க்கு எந்த வழியும் பரிகாரமும் இல்லை. அதை செய்பவர்கள் எப்போதும் மோசமான நரகத்தில் வீழ்ந்து கிடப்பர் என்று எச்சரிப்பவர், நரகம் அதுவும் மோசமான நரகம் என்றும், வாழ்க்கை மோசமாகும் என்றும் இரு பொருளில் கொள்ளலாம்.
இந்த மானிட ஜென்மம் காணகிடைக்காதது, அவ்வாறு கிடைத்த ஜென்மத்தை களிப்பது இது போன்ற வல்வினை செய்தா களிப்பது, கழிப்பது? நீங்கள் பணிகளுக்கு இயலாதவனாய், முடவனாய், பிறந்தாலும் மோக்ஷத்தை அடைய தடையேதும் இல்லை, ஒருமுறையேனும் சொல்லிவிடு அதுவே போதும் என்கிறார். இதே போல் மேலும் ஒரு பாடலில் மனிதனாக பிறந்தவன் தான் கொட்டாவி விடும் போதாவது ‘ராம்’ என்று சொன்னால் அவனை நினைத்து வழிபட்டால் அதுவே போதும் என்றும் சொல்கிறார்.
சிலர் தாம் எல்லாம் அறிந்து விட்டோம் இனி எதுவும் கற்க, காண வேண்டியதில்லை என்று எண்ணுவர், அவர்களை பார்த்து சொல்லும் படியாகவும், மேலும் சிலர் கிடைத்த எதோ ஒன்றை வைத்து இதுவே எல்லாம் என்று விவாதம் செய்வர் அவர்களுக்கு அறிவுறை சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளது அடுத்த சரணம். அய்யாமார்காளே, அம்மாமார்களே என்பதை ஒரு வார்த்தையில் ஓய் என்று விளிக்கிறார், வீட்டை (எல்லாம்) அடைந்து விட்டோம் என்று இறுமாப்புடன் வெறு வார்த்தைகளை பேசி வாழ்வை கழிக்க கூடாது, அப்படி ஒரு கிடைப்பதற்க்கறிய கிடைத்த (மெய்) வீட்டை தந்தவனை என்றென்றும் வணங்க வேண்டும் என்றும், மேலும் உயரிய நிலைகள் கிடைக்கவும், கிடைத்தது நிலைக்கவும் அவன் திருநாமத்தை என்றென்றும் சொல்லி வரவேண்டும் என்றும் சொல்கிறார்.
விசனத்திற்க்கு ஒப்பான இந்த மாயையில் அகப்பட்டு காலத்தை ஏன் வீணாக போக்குகிறீர்கள், அதிலிருந்து விடு பட (என் குருவான) வடபத்ராரியர் போற்றுகின்ற அந்த நடன கோபாலனின் நாமத்தை உறைப்பீர், எல்லாம் இனிதாக, நன்றாக வைகுண்டம் சேர்வீர்.
9 comments:
நன்றி சிவமுருகன். உபகாரம் செய்யமல் போனாலும் அபகாரம் பண்ணக்கூடாது என்று சொல் உண்டு.
அது போல் மாதவனைப் பழித்தால் கூடப் பொறுப்பான். தன் அடியாரை
பழிப்பவர்களக் களைந்து
விடுவான்.பிழை பொறுக்க மாட்டான்.
வாங்க வல்லி,
//உபகாரம் செய்யமல் போனாலும் அபகாரம் பண்ணக்கூடாது என்று சொல் உண்டு.அது போல் மாதவனைப் பழித்தால் கூடப் பொறுப்பான். தன் அடியாரை
பழிப்பவர்களக் களைந்து
விடுவான்.பிழை பொறுக்க மாட்டான்//
ஆமாம் சரியாக சொன்னீர்கள், வருகக்கும், பின்னூட்டட்திற்க்கும் மிக்க நன்றி.
சிவமுருகன். எளிமையான பாடல் போல் தோன்றினாலும் ஆங்காங்கே விளக்கம் சொல்வதற்கு இருப்பதாகத் தோன்றுகிறது. அவற்றிற்கு விளக்கம் சொல்லுங்கள்.
இதோ, இப்போது சபரிமலை பற்றி வாய்[கை!!] கூசாமல் எழுதுகிறார்களே, அவர்களுக்கு ஏற்ற பாடல்!
விளக்கம் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.
பொதுவில் இறைவனுக்கு எதிரிகள் இருக்க மாட்டா! இருக்கவும் முடியாது. இறைவனடியவர்களுக்குத்தான் எதிரிகள் இருப்பார்கள். அவர்களையும் காத்து அவர்களிடமிருந்து அடியவர்களையும் காப்பதே கடவுளின் கடமை.
ஆம் திரு SK,
//இதோ, இப்போது சபரிமலை பற்றி வாய்[கை!!] கூசாமல் எழுதுகிறார்களே, அவர்களுக்கு ஏற்ற பாடல்! //
இவர்களுக்கு அன்றே சொல்லியும் இன்றும் தொடர்கிறார்கள்.
அண்ணா,
//விளக்கம் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சிவமுருகன். மிக்க நன்றி.//
மிக்க நன்றி.
இராகவன்,
//பொதுவில் இறைவனுக்கு எதிரிகள் இருக்க மாட்டா! இருக்கவும் முடியாது. //
இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமான வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள். அருமை. உங்களிடமிருந்து நிறைய கற்க வேண்டும்.
//இறைவனடியவர்களுக்குத்தான் எதிரிகள் இருப்பார்கள். அவர்களையும் காத்து அவர்களிடமிருந்து அடியவர்களையும் காப்பதே கடவுளின் கடமை.//
கடவுள் தன் கடமையை செய்கிறார், மனிதன்? (கேள்விகுறியே).
Post a Comment