வைணவ மரபில் அப்பனாம் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்கு முதலில் தேவையானது அன்னையாம் திருமகளின் திருவருள். அப்பனின் கருணையே அம்மையாக வடிவ்ம் கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு எல்லாம் தந்தையாக இருக்கும் பெருமானே பக்கம் சாரா பெருமகனாகவும் இருப்பதால் நாம் செய்த நல்லது கெட்டது பார்த்து தான் அவன் தீர்ப்பு அமையும். அவன் உகக்கும்படியாக (மகிழும்படியாக) நாம் செய்தது மிகவும் குறைவே என்று நமக்கு நன்கு தெரியும். அதனால் தாயாரின் திருவடியை முதலில் பற்றிவிட்டால் நாம் தந்தையாரின் திருவடியைப் பற்றும் போது நம் தாய் நமக்காக பெருமாளிடம் பரிந்துரைப்பாள். அப்படி பெருமாளின் ஒரு பக்கத்தில் (பாரிசத்தில்) அமர்ந்து திருவானவள் பரிந்துரைப்பதால் தான் அந்த நற்செயலுக்கு ஸ்ரீபாரிசு ..> சிபாரிசு என்று பெயர் வந்ததாகப் பெரியோர்கள் சொல்லுவார்கள்.
இந்த மரபினை ஒட்டியே திருப்பாவை பாடிய கோதை நாச்சியாரும் முதலில் நப்பின்னை பிராட்டியைச் சரண் புகுந்து அவள் துணையுடன் கண்ணனைச் சரணடைகிறாள். நப்பின்னையை ஒத்த இன்னொரு பிராட்டி தானே கோதையும். அப்படியிருக்க அவரும் நப்பின்னையைச் சரணடைய வேண்டுமோ என்றால் நமக்கு அந்த நல்வழியைக் காட்டியருளத் தானே அவதரித்தாள் கோதை? அந்த அவதார நோக்கத்தின் படி அந்த நல்வழியைத் தானே பின்பற்றி நமக்கு நல்ல ஆசிரியையாக அமைகிறாள்.
இப்படி இருக்க நாம் சரணடைவது யாரை? திருமகளையா? நப்பின்னை பிராட்டியையா? அவர்களைச் சரணடைந்தாலும் பெருமாளின் திருவருள் பெறத் துணையாவார்கள் தான். ஆனால் தாயாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் ஆண்டாளைச் சரணடைந்தால்? இன்னும் அது பெருமாளுக்கு உகப்பான செய்கையாக இருக்குமே?
அப்படி கண்ணன் கைத்தலம் பற்றும் கனாவினைக் கண்ட சூடிக் கொடுத்தச் சுடர்கொடியின் திருவடியைப் பற்றும் வாய்ப்பு எப்போது கிட்டும் என்று இந்தப் பாடலின் மூலம் வியக்கிறார் நாயகி சுவாமிகள்.
இதோ முழுப்பாடலும். பாடலின் வரிகளுக்கான பொருளை அடுத்த இடுகைகளில் காணலாம்.
கண்ணன் கைத்தலம் பார் கனா கண்ட நாச்சியார்
கருணைக்கு ஆவது எப்போது?
புண்ணியஸ்தலமாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
போய் சேருவது எப்போது?
ஆயர் மகன் மேல் ஆசை கொண்டாள் அடிக்கு
அன்பு செய்வது நாம் எப்போது?
வேயர் புகழ் வில்லிபுத்தூருக்கு ஏக நாம்
விருப்பம் வைத்திடுவது எப்போது?
அச்சுதன் அனந்தன் மேல் ஆசை வைத்தாள் மலர்
அடி சிரம் அணிவது எப்போது?
முச்சகம் போற்றும் வில்லிபுத்தூருக்கு
முடிவில் செல்வது நாம் எப்போது?
துளசி வனம் தனில் உலக மகிழ் ஆண்டாளுக்கு
தொண்டு செய்திடுவது எப்போது?
குளம் மூன்றும் ஒன்றாய் வில்லிபுத்தூருக்கு ஏக
உளம் மகிழ்ந்திடுவது எப்போது?
அன்ன நடை எங்கள் ஆண்டாள் திருவடிக்கீழ்
அமர்ந்திடுவது எப்போது?
அன்னவயல் ஸ்ரீ புதுவைக்கு ஏக நாம்
ஆசை வைத்திடுவது எப்போது?
திருவாடிப்பூரத்தில் அவதரித்தாள் சே
வடிக்கீழ் புகுவது எப்போது?
திருப்பாவை அருளும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு
செல்வது இனி நாம் எப்போது?
குயிலைக் கூவாய் என்னும் குயில் மொழியாள் அடிக்
கீழ் குடி ஆவது எப்போது?
குயிலினங்கள் ஆர் ஸ்ரீவில்லிபுத்தூர் தனில்
குடியேறி வாழ்வது எப்போது?
பெண்மணியாம் கோதை ஆண்டாள் திருப்பாதம்
பேணிப் பணிவது எப்போது?
கண்குளிர அப்பனை வில்லிபுத்தூர் தனில்
கண்டு களிப்பது எப்போது?
இண்டர் நடைக்குணம் கொண்டாடும் ஆண்டாள்
இணையடி பணிவது எப்போது?
அண்டர் முனிவர்கள் தொண்டர் ஏத்தும் புத்தூர்
கண்டு களிப்பது எப்போது?
திருவரங்கேசனை மருவி வாழ் ஆண்டாள் தன்
திருவடை அடைவது எப்போது?
இருநிலம் புகழ் வில்லிபுத்தூருக்கே போவேன் என்று
இயம்பி நடப்பது எப்போது?
நடனகோபாலனை நாடும் கோதைத் திரு
அடி நாடி வாழ்வது எப்போது?
வடபத்ரஸாயி அருளும் வில்லிபுத்தூர்
மருவி வாழ்ந்திடுவது எப்போது?
Thursday, March 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment