Thursday, August 28, 2008

இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.



ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

2 comments:

சிவமுருகன் said...

அண்ணா,
சுவாமிகளின் பல அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று!

இப்பாடல் என்னுடைய பாட்டியும் அத்தையும் பாட கேட்டுள்ளேன், அம்மா (இந்த பாடலை) பாட மாட்டாங்க.
அப்படியே உருக்கி விடுவார்கள் இருவரும்! டி.எம்.எஸ் - ம், இராமரத்தினமும் அப்படியே! பாடல் உருகும் பாடல்.

இந்த பாடலை பதிக்காமல் எப்படிவிட்டேன் என்று தெரியவில்லை அதுவும் நன்மையாகவே அமைந்தது! இல்லையென்றால் இவ்வளவு எளிமையாக! விளக்கமாக படித்திருக்க முடியாது. மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன். மீண்டும் தொடர்ந்து இடத் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். சரியா? :-)