Friday, June 30, 2006

இளைப்புகள் தீரும் வழி

சிவமுருகன் அண்மையில் இந்த வலைப்பூவில் 'விரைந்து வந்து காட்சி தருவாய்' என்ற தலைப்பிலான பதிவில் நாயகி சுவாமிகளின் 'ஸெணம் அவி ஸேவ தீ' என்ற அருமையான பாடலை இட்டிருந்தார். அந்தப் பாடலைப் படிக்கும் போது தோன்றும் எண்ணங்களை இங்கே தொடராகப் பதிக்கலாம் என்று எண்ணுகிறேன்.

முதலில் பல்லவியில் சொல்லியிருப்பதைப் பற்றிப் பார்ப்போம். எத்தனையோ வகையான இளைப்புகள் இந்த உலகில் பிறவி எடுத்தால். தினந்தோறும் எத்தனையோ விதமான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். அறிந்தோ அறியாமலோ எத்தனையோ நல்ல செயல்களையும் செய்கிறோம்; தீய செயல்களையும் செய்கிறோம். செய்யும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பயன்களையும் அனுபவிக்கிறோம். புண்ணிய வினைகளுக்கு இன்பம் தரும் விதயங்களும் பாவ வினைகளுக்குத் துன்பம் தரும் விதயங்களும் நம்மைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றன; நம்மையும் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைக்கின்றன.

துன்பம் நேர்கையில் அந்த துன்பத்தால் துவண்டு இளைப்பெய்துதல் இயற்கையான ஒன்றாக இருக்கின்றது. பசி, பிணி, மூப்புத் துன்பம் என்று இவற்றை பாரதியார் சொல்லுவார். இவற்றில் எது வந்தாலும் நாம் கற்றதும் பெற்றதும் நம்மை விட்டு விலகி புத்தித் தடுமாறி தயங்கி பல செயல்கள் செய்து இளைப்பு எய்துகிறோம். இதனை நம் சொந்த செயல்களிலும் மற்றவர் செயல்களிலும் காண்கிறோம்.

அதே நேரத்தில் இன்பத்திலேயே இருந்தாலும் ஒரு வித இளைப்பு ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் முதுமொழிக்கேற்ப. இதனை நாம் எல்லோரும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்போம். இன்பங்கள், சுகங்கள் அதிகமாகும் நேரங்களிலும் மனம் தடுமாறி பல செயல்கள் செய்து இளைப்பு எய்துகிறோம்.

இந்த உலகில் இருக்கும் எல்லாவற்றையும் இன்பம், துன்பம் என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம். இரண்டின் மூலமாகவும் இளைப்பே ஏற்படுகிறது என்பதால் இந்த உலகில் இருக்கும் எல்லாவற்றாலும் நமக்கு ஏற்படுவது இளைப்பு தான் என்பது தெளிவு.

இந்த இளைப்பு நீங்க என்ன வழி?

அவன் அருளைப் பெறுவதே வழி.

அது எப்படி நிகழும்?

அவனுடனும் அவன் அடியார்களுடனும் கூடினால் நிகழும்.

அது எப்போது நிகழும்?

நம் மனமும் உடலும் சூழலும் அதற்கேற்ப ஆகும் போது நிகழும்.

சூழலை நாம் மாற்ற முயலலாம். இறைவனைப் பற்றிச் சிந்திக்க முயலலாம். ஆனால் எப்படி உடலையும் மனதையும் மாற்றுவது? நாம் என்ன தான் சூழ்நிலையை மாற்றினாலும் மனமும் உடலும் நம்மை தகுந்த நேரத்தில் செல்லக் கூடாத வழியில் இழுத்துச் சென்று விடுகிறதே? அதற்கு என்ன வழி?

கீதையில் பகவான் சொல்லியிருக்கிறார் வழி. எத்தனையோ விதமான தவங்களும் யோகங்களும் ஒருவர் செய்தாலும் இறைவனைக் காணும் வரை அவருடைய மனமும் உடலும் முழுக்க முழுக்கத் தூய்மை அடைவதில்லை. அதனால் அவற்றால் துன்பம் நேர்வது நடக்கத் தான் செய்யும்.

ஆமாம். கீதையில் ஸ்வாமி சொன்னதற்கு விசுவாமித்திர மகரிஷியே ஒரு தகுந்த எடுத்துக்காட்டு. எத்தனை எத்தனைத் தவங்கள் செய்திருந்தும் உடலும் மனமும் தூய்மையடையாததாலேயே அவர் மீண்டும் மீண்டும் கீழ்நிலைக்கு இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இறைவனைக் காண்பதென்பது அவ்வளவு சுலபமா? இறைவனைக் காண்பது எப்படி?

அவனருளாலேயே தான் அவன் தாள் வணங்க முடியும். அதற்கும் அவனை வணங்கி நிற்பதே வழி.

ம்ம்ம். இப்போது புரிகிறது. அப்படி என்றால் நான் வேண்டிக்கொள்ள வேண்டியது...

ஸெணம் அவி ஸேவ தீ3
ஸெரிர் வெக்ள கெரி
தொர ஸெர மிள்விலேத்
ஸீன் திரயி

பெருமாளே. விரைந்து வந்து உன் அருட்தரிசனம் தந்து
என் உடலைத் (மனதையும் சேர்த்துத்) தூய்மை செய்து
உன்னுடன் (உன்னுடனும் உன் அடியார்களுடனும்) நான் சேர்ந்திருக்கும் படி அருள் செய்தால்
என் இளைப்புகள் எல்லாம் தீரும்

இதையே மீண்டும் மீண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.

11 comments:

சிவமுருகன் said...

அருமையான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா.

கோவி.கண்ணன் said...

//உன்னுடன் (உன்னுடனும் உன் அடியார்களுடனும்) நான் சேர்ந்திருக்கும் படி அருள் செய்தால்
என் இளைப்புகள் எல்லாம் தீரும்

இதையே மீண்டும் மீண்டும் இறைவனிடம் வேண்டுகிறேன்.//

தேன்கூடு போட்டியில் இம்மாத தலைப்பு மரணம் . மேலே உள்ளதை படிக்கும் போது ஏனோ இதை எழுத தோன்றியது

ENNAR said...

//துன்பம் நேர்கையில் அந்த துன்பத்தால் துவண்டு இளைப்பெய்துதல் இயற்கையான ஒன்றாக இருக்கின்றது. பசி, பிணி, மூப்புத் துன்பம் என்று இவற்றை பாரதியார் சொல்லுவார். இவற்றில் எது வந்தாலும் நாம் கற்றதும் பெற்றதும் நம்மை விட்டு விலகி புத்தித் தடுமாறி தயங்கி பல செயல்கள் செய்து இளைப்பு எய்துகிறோம். இதனை நம் சொந்த செயல்களிலும் மற்றவர் செயல்களிலும் காண்கிறோம்.//
நல்ல விளக்கம்

rnatesan said...

மிக அனுபவித்து நல்லதொரு விளக்கத்தை தந்துள்ளீர்கள்!

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், அடுத்தப் பாடலைப் போடாமல் காத்திருப்பதற்கு நன்றி. இந்தத் தொடரை விரைவில் எழுதி முடித்துவிடுவேன். பின்னர் அடுத்தப் பாடலை இடலாம். உங்களின் பொறுமைக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன். தனித்துவச் சிந்தனை என்று இதனைத் தான் நான் ஏற்கனவே சொன்னேன். தேன்கூடுப் போட்டியின் தலைப்பு இதனைப் படிக்கும் போது நினைவிற்கு வருவது இயற்கை. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா.

குமரன் (Kumaran) said...

ஆமாம் நடேசன் ஐயா. இந்தப் பாடலை சிவமுருகன் இங்கே இடுவதற்கு முன் கேட்டதில்லை. முதல் முறை கேட்கும் போதே அருமையாக இருந்தது. அப்போது தோன்றிய எண்ணங்களை எழுதுவதால் ஒரு கோர்வையாக எண்ணங்கள் வந்துள்ளன என்று எண்ணுகிறேன். புரிதலைத் தருபவன் புருஷோத்தமன்.

Sivabalan said...

குமரன்,

பல ஆன்மீக கருத்தை தாங்கியுள்ள பதிவு. நன்றி.

இளைப்பு என்றால் என்ன என்று எனக்கு சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன். Weary, Fatigue என்ற பொருளில் 'இளைப்பு' என்பதனைச் சொல்லியிருக்கிறேன்.

Sivabalan said...

குமரன்,

// Weary, Fatigue என்ற பொருளில் 'இளைப்பு' என்பதனைச் சொல்லியிருக்கிறேன் //

இப்பொழுது எனக்கு எளிமையாக புரியமுடிகிறது.

மிக்க நன்றி.