Friday, July 28, 2006

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி

ஒருமுறை நாயகி சுவாமிகளின் வரகவிதுவத்தை ஆண்டாள் நாச்சியார் கேட்க எண்ணி அவர் கனவில் தோன்றி, தம்மை திருவில்லிபுத்தூரில் தம்மை சந்திக்கும்படி வேண்டியதை அவளிட்ட கட்டளையாக பாவித்து சுவாமிகளும் உடனே அங்கே எழுந்தருளி அங்கிருந்த அரங்கனையும், ஆண்டாளையும் தரிசித்து நின்று தமது கீர்த்தனைகளால் பாடி அங்கிருந்தவர்களை பரவச படுத்தியும் தாமும் பரவசப்பட்டார். இன்றைய ஆடி பூரம் “நல்ல நாளில்” மேலும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டும் அவர் அன்று பாடிய பாடல் இப்பதிவில். இப்பாடலை டி.எம்.எஸ்.அவர்கள் பாடியுள்ளார்.

பல்லவி
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)

அநுபல்லவி
விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராளை சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் ஸ்ரீஆண்டாளின் திருவடிகளை அடையுங்கள்.

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)

அந்த நந்தீஸர் மீது வலம் வரும் மஹாதேவன் ஈசனும் ஏனைய தேவர்களும் போற்றும், அந்த நடன கோபாலனிடம் சேர்த்திடுவாள். எனவே ஆன்றோர்களே! சான்றோர்களே! அடையுங்கள், அவளடியை அடையுங்கள். இந்த அனுபல்லவியில், மார்கழி மாத திருப்பாவை பாடினால் நடன கோபாலனிடம் சேர்ந்திடலாம் என்பதை மறைபொருளாக சொல்லியிருக்கிறார் சுவாமிகள்.

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மாறி பிறவி எடுக்க வைக்கும் இப்பிறவி பிணிதன்னை அதிகரிக்கும் ஐந்திரியங்களும் ஒன்றாகும், பல காலம் தவம் செய்தாலும் கிட்டாத நல்வழியாம் வைகுண்ட வழி கைகூடும். உன்னை ஏசி திறிந்த உலக்கதார் வாய் உன்னை புகழ்வர், இறந்து தரை சேற்வதற்க்கு முன்னால், உலகிலிருக்கும் திருவல்லி புத்தூருக்கு சென்று ஆண்டாளை சரணனடையுங்கள்.

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

எல்லாவற்றையும் தள்ளி போடும் தாமச குணத்தை ஒழிக்கும், சஞ்சலங்களை ஒழிக்கும், நேசம் மிகுந்து விடும், வைகுண்ட வழிதெரியும், என்றும் உண்மையான பக்தி வழி தெரியும், ஏதும் தெரியாத பாமர வாழ்வு வாழ்வதை விட, எல்லா நன்மைகளையும் அள்ளி தரும் அந்த திருவல்லிபுத்தூர்தனில் உறையும் தெய்வமான ஆண்டாளை சரணடையுங்கள்.

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யமும் ஆனந்த வாழ்வு தரும் நிலை அடைவதே வாழ்வு அதை அடையாமல் அடைய முயற்ச்சிக்காமல் இருப்பது வாழ்வல்ல அது தாழ்வு, என்றும் இருப்போம் என்று இருமாப்பு கொள்ளாமல் அனைத்து சித்திகளையும் தரும் திருவல்லிபுத்தூர்தனில் இருக்கும் ஆண்டாளை சரணடையுங்கள்.

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவளை கரம் பற்றியவனின் அருளுக்கு ஆளாயிடலாம் அவனடியாருக்கு அடியாராகிடலாம், தேவர்களுக்கு ஆளாயிடலாம் வீதிகள் தோறும் ஆடி பாடிடலாம். பல வழி உண்டு என்ற எண்ணி கெட்டு அலையாமல், அண்ணலாம் திருவரங்கன் எழுந்து வந்து ஆண்டாளை கரம்பற்றிய திருவல்லிபுத்தூர்தனில் சென்றடையுங்கள்.

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்டதை வரமாக தரும் கற்பக தருவான, அன்பு கடலான இருப்பவளை வணங்க, குழுவாக, கூட்டமாக ஒன்றாக வர அழப்பவளாம், அவளை பூ,இலைகளை சமர்ப்பித்து, சூட்டி, எப்போதும் அனர்த்தங்கள் அதிகரிக்கும் இவ்வுலகம் தன்னில் அலையாமல், எப்போதும், திருவிழாகோலம் கொண்டிருக்கும் திருவல்லிபுத்தூர் தனிலிருக்கும் ஸ்ரீஆண்டாளை சரணடையுங்கள்.

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவ்வுலக வாழ்வு கிட்டும், எண்ணங்கள் நல்வழியில் நிலைக்கும்,
சுகம் மென் மேலும் பெருகும் கிட்டும், தொண்டு செய்ய செய்ய பக்தி வலுக்கும், அதிகரிக்கும். இவ்வுலக வாழ்வே சுகம் என்று தளர்வடையாமல், உள்ளம் மகிழ வைக்கும் திருவல்லிபுத்தூரில் உறையும் ஸ்ரீஆண்டாளை அடையுங்கள்.

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வல்வினை, தீவினை இருவினைகளை, மறுபிறப்பை மீண்டும் மீண்டும் பற்பல முறை பிறவி எடுக்கும் இடரை நீக்கும், குருவருளையும், தான் ஆளும் கோபாலன் திருவடியை உன் தலைக்கு அளித்து, வறுமையான சிறுமை, அறியாமையை இவ்வுலகில் திரிந்தலையாமல், ஹரியின் அருளாக, அருளுடன் திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தங்களை அறுக்கும் பத்தியாமாம், அந்த பரமானந்த ஹிருதயமாம், அரங்கனிடம் சேர்ப்பாள், கண்தெரியாத அந்தகனாய், அறியாமை கண்மறைக்கும் அந்தகனை ஹரி வந்து ஆட்கொள்ள இருக்கும் நீ, இந்த உலகமே உன் எல்லை என்றில்லாமல், ஆதி அந்தமில்லா ஊரான திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

அடுத்த சரணங்கள் அடுத்த பதிவில்.

3 comments:

குமரன் (Kumaran) said...

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்.

மிக நல்ல பாடல் சிவமுருகன். நேற்று தான் இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சிவமுருகன் said...

அண்ணா,
இப்பாடலை ஆடி பூரத்தில் பதிப்பது என்று எண்ணி தட்டி வத்திருந்தேன் ஆனால் சற்றே திசை மாறி விட்டது. இன்று உங்களது பதிவை கண்ட பின் தான் ஞாபகம் வந்தது. உடனே எடுத்து பதித்து விட்டேன். ஞாபகபடுத்திய உங்களுக்கு நன்றிகள் பல.

Merkondar said...

நல்ல பாடல் கேட்டு மகிழ்ந்தேன்