Saturday, July 29, 2006

அடையுங்கள் அடையுங்கள்



நேற்றைய பதிவின் தொடர்ச்சி,

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இவ்வுலக அடியார்களின் இருவினைகளும் தீர்ந்துவிடும், விண்மண் மண் அளந்த நெடியோனின் அடியார் குடியாம், குறையாத செல்வத்துக்கு அடித்தளமாம், அதன்படி தான் வாழ்கிறோம் என்று திரியாமல், அடியார்கள் கூடி மகிழும், திருவல்லிபுத்தூரதினில் சென்று ஆண்டாளின் பாதகமலங்களை பற்றி கொள்ளுங்கள்.

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினைகள் உங்களை நோக்கி ஓடி வரும் அதை தடுக்க, அதன் பாதயிலுருந்து அகன்று தொண்டரருளை துணையாக கொண்டு விட்டால், அவனடியார்கள் கிருபை நாடி வரும், நீங்களும் பன்னெடுத்து பாடலாம், உங்கள் உள்ளத்தில் தெளிவும், ஒளியும் பிறக்கும், துன்பங்கொண்ட சரீரத்தால் போகத்தை நிலையான இன்பம் என்று இருக்காமல், அடியார் குழாத்துடன், ரெங்கமன்னர் வழும் தலமாம் திருவல்லிப்புத்தூர் தன்னில் சரணடையுங்கள்.

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தைகளை தினமும் அருளி கைகூடவைக்கும், விளைகின்ற துன்பவினைகள் தீரும், நித்தமும் பகவத் கைங்கர்யம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், நெஞ்சத்தில் உள்ளத்தில் ஏற்படும் அழுக்கான அழுக்காறு, வஞ்சங்கள் தீர்ந்து விட செய்யும். துன்ப வினைகள் கொண்ட பித்தத்துடன் இந்த உலகில் திரியாமல், அத்தனையும் செல்வங்களும் தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ரரின் அருள்பெறலாம், மலராளாம், பூமகளின் திருஅவதாரமாம் ஆண்டாளின் சந்நதியை அடைந்தாள் அவை அனைத்தும் பெறலாம், உயிருள்ள சடலமான இவ்வுடலை நம்பி கெட்டலையாமல், உண்மையான-திடமான நம்பிக்கை தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

தமிழக அரசின் சின்னத்திலும் இத்திருவல்லிபுத்தூரின் கோவிலின் கோபுரம் இடம்பெற்றிருப்பது குறிபிடத்தக்கது.

No comments: