Sunday, October 30, 2005

அனகனும் ஆண்டவனும்

அர்ச்சுனன் பாண்டவர்களில் நடுவனாய் இருந்தாலும் அவன் தான் மகாபாரத்தின் கதா நாயகன். கண்ணனுடன் தோழமை கொண்டவன். வில் வித்தையில் சிறந்து 'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் பெற்றவன். குற்றமற்றவன் என்பதால் அனகன் என்னும் பெயர் பெற்றவன். அவனை நம்பியே பாண்டவர்களின் வெற்றி இருந்தது. அதன் காரணத்தாலேயே தன் பக்தர்களை எந்த நேரத்திலும் கைவிடாத அச்யுதனான கண்ணன் அந்த பார்த்தனுக்கு சாரதியாய் அமர்ந்தான்.

வீரத்துடன் தன் கடமையைச் செய்வதற்காக போர்களத்திற்கு மாதவனோடு வந்தான் அனகன். அதுவரை பல போர்களங்கள் கண்டவன். எதிரிகளை நெருப்பென தகிப்பதால் பரந்தபன் என்ற பெயர் அடைந்தவன். அவன் இந்த போர்களத்திற்கும் மிக்க ஊக்கத்துடன் வந்ததில் வியப்பேதும் இல்லை. கண்ணனிடம் 'அச்யுதா. இந்த தருமநெறி தவறிய கௌரவர்களுக்காக என்னுடன் போரிட வந்திருப்பவர்களை பார்க்கவேண்டும். ரதத்தை இரு சேனைகள் நடுவில் நிறுத்து' என்றான். கண்ணனும் அவ்விதமே செய்து 'குந்தியின் மகனே. இதோ போரிட வந்திருக்கும் உன் உறவினரான கௌரவர்களைப் பார்' என்றான்.

அங்கு பார்த்தன் பார்த்த காட்சி யாராயிருந்தாலும் உலுக்கியிருக்கும். எங்கு நோக்கினாலும் எதிர்தரப்பில் இருப்பவர்கள் எல்லோரும் உறவினர்களே. இதுவரை எந்த போர்களத்திலும் வராத நடுக்கம் உறவினர்களைக் கண்டதும் அர்ச்சுனனுக்கு வந்துவிட்டது. பலவிதமான நியாயங்களை எடுத்துக் கூறி தான் போர் புரிய மாட்டேன் என்று கூறி வில்லை கீழே வைத்துவிட்டு அமர்ந்துவிட்டான். இன்று இவன் கூறும் நியாயங்கள் எல்லாம் உறவினர்களைப் பார்த்ததால் வந்தது. அந்த நியாயங்கள் எந்தப் போருக்கும் பொருந்தும் - ஆனால் அந்தப் போர்களங்களில் எல்லாம் அனகன் அதைப் பற்றி எண்ணிப்பார்த்து கிடையாது.

'நீ செய்வது தவறு. கௌரவர்கள் தான் போரை வலுக்கட்டாயமாய் தொடங்கியவர்கள். தருமத்திற்காக போர் செய்யப் பிறந்த நீ இப்படி பேடியாய் இருக்கக்கூடாது' என்கிறான் மாயவன். பார்த்தனுக்கும் புரிகிறது தான் செய்வது தவறு என்று. ஆனால் 'தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்னும் முதுமொழிக்கேற்ப மனது குழப்பம் உற்றிருக்கிறது. அதனால் தனக்கு தகுந்த வழியைக் காட்டித்தருமாறு பகவானைச் சரணடைந்தான்.

தன்னிடம் சிஷ்யனாய் சரணடைந்த அனகனுக்கு ஆண்டவன் பல விதமான தருமங்களைப் போதிக்க ஆரம்பித்தான். அது அனகனுக்கு மட்டும் சொன்னதா? இல்லை நம் அனைவருக்கும் சொன்னது.

மனிதன் உடலும் மனமும் கொண்டிருக்கும் வரை செயல் செய்யாமல் இருக்க முடியாது. அதனால் செய்யும் எல்லா செயல்களையும் இறைவனுக்கு தத்தம் செய்துவிட்டு செயலாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். 'செய்க வினை; பயன் நோக்காது ஆற்றுக' என்றான் மாதவன்.

மனமோ மிகவும் சஞ்சலமானது. அவ்விதம் இருக்க எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து செயலாற்றுவது எப்படி சாத்தியம் என்றான் குந்தி மகன்.

நிலையானது எது; நிலையற்றது எது என்ற ஞானத்தை அடைந்தால் அப்படி செயல் செய்வது சாத்தியம் என்றான் மாதவன்.

அந்த ஞானத்தை எப்படி அடைவது என்றான் தருமனின் தம்பி.

மீண்டும் மீண்டும் அதைப் பற்றி தியானம் செய்வதால் அந்த ஞான நிலையை அடையலாம் என்றான் கேஸவன்.

அறிவு சிறந்தால் கருவம் தானே ஓங்குகிறது. கருவம் ஒருவனை கீழே தள்ளிப் புதைத்துவிடுமே என்றான் அனகன்.

எல்லாம் வல்ல இறைவனின் மேல் காதல் கொண்டால் அந்த பக்தி ஒருவன் அடையும் ஞானத்தால் வரும் கருவத்தை நீக்கிவிடும் என்றான் கமலக்கண்ணன்.

இதெல்லாம் எல்லோரும் செய்ய முடியுமா? என்னால் முடியாது என்று தோன்றுகிறது. எளிதான வழி இருந்தால் சொல் என்றான் அனகன்.

உண்டு. இங்கு உனக்குள்ளது என்று நீ நினைக்கும் எல்லாவிதமான பந்தங்களைப் பற்றிய பாசங்களை விட்டுவிட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லாவிதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கிறேன் என்றான் ஆண்டவன்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:


எல்லாவிதமான பந்தங்களை விட்டுவிடுவதென்றால் எல்லோரும் துறவு பூண வேண்டுமா?

இல்லை. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே பந்தங்களில் உள்ள பாசத்தைப் பற்றுதலை மட்டும் துறக்க வேண்டும்.

அப்படி என்றால் என் குழந்தை அழுதால் நான் அதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாமா?

அந்த குழந்தை மேல் உள்ள அன்பைக் காதலைத் துறக்க வேண்டாம். ஆனால் அந்த குழந்தை மட்டுமே என்னுடையது என்ற பற்றுதலை நீக்க வேண்டும். இங்கிருக்கும் எல்லோரும் இறைவனுக்குரியவர்; அதனால் எல்லோரும் என் அன்பைப் பெறத் தகுந்தவர்கள் என்னும் எண்ணம் கொள்ளவேண்டும்.

'என்னையே சரணடை. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்' என்று கண்ணன் கொடுத்த உறுதிமொழியே கீதையின் கடைசி உபதேசம்; கடைசி ஸ்லோகம்; சரம ஸ்லோகம் எனப்படுவது. இந்த சரம ஸ்லோகத்தைப் பற்றி நாயகி ஸ்வாமிகள் இந்த பாட்டில் குறிப்பிடுகிறார்.

பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ
பாப் ஜாய் பஜன கேர்
பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ
பரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக்
சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரி
மொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யே
பரமபதமு தேய் தேய் தேயி (நிச்சு)

paramapadhamuk vaatES aiki mo-n-nU

paap jaay bajana kEr
paramapadhamuk vaatES aiki mo-n-nU
paramapadhamuk vaatES arju-nuk
saramaSlOk-haal Sangki ri:yES-hari
mora nujvaavu-nu nI:Sthako ri:yE
paramapadhamu dEy dEy dEyi (-niccu)

பரமபதமுக் வாட் ஏஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே

பாப் ஜாய் பஜன கேர் - பாபம் போகும் பஜனை செய்

பரமபதமுக் வாடேஸ் ஐகி மொந்நூ - பரமபதத்திற்கு வழி இதுதான் கேள் மனமே

பரமபதமுக் வாடேஸ் அர்ஜுநுக் சரம ஸ்லோக்ஹால் ஸங்கி ரி:யேஸ்ஹரி - பரமபதத்திற்கு வழி இதுதான். சரம ஸ்லோகத்தால் அர்ச்சுனனுக்கு ஹரி சொல்லியிருக்கிறான்.

மொர நுஜ்வாவுநு நீ:ஸ்தகொ ரி:யே - மரணம் பிறப்பு என்பவை இல்லாத

பரமபதமு தேய் தேய் தேயி - பரமபதம் கொடுப்பான்; கொடுப்பான்; கொடுப்பான்.

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு
க்ருஷ்ணா ராமா மேன்
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு
கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமம்
தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொ
வடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ்
நடனகோபால நாயகி ஹொய் து (நிச்சு)

keto -hinggaday srI kESava namamu

krushNaa raamaa mEn
keto -hinggaday srI kESava namamu
keto -hinggaday srI kESava namam
thata budhdhi Sero miLi gaviyaaSthenko
vatapathraaryu-nu kruba-haal vaat abbES
-natanagOpaala naayaki -hoy thu (-niccu)

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவ நாமம்

க்ருஷ்ணா ராமா மேன் - க்ருஷ்ணா ராமா என்று சொல்

கெடொ ஹிங்கடய் ச்ரீ கேஸவ நமமு - கரையேற்றும் ச்ரீ கேஸவன் நாமம்

தட புத்தி ஸெரொ மிளி கவியாஸ்தென்கொ - உருகிய மனத்துடன் பாடியவர்களை

வடபத்ரார்யுநு க்ருபஹால் வாட் அப்பேஸ் - நம் குருநாதராகிய வடபத்ரார்யர் கருணையால் நல்லவழி கிடைத்தது.

நடனகோபால நாயகி ஹொய் து - நடனகோபாலனாம் நம் இறைவனுக்கு நாயகியாய் நீ தினமும் ச்ரீ ஹரி பஜனை செய் மனமே!

38 comments:

Anonymous said...

ஸெளராஷ்ட்ரத்தில் குறில் எகரம் மற்றும் ஒகரம் உண்டா ? இல்லை என்று நான் இதுவரை நினைத்திருந்தேன்... ஆனால் பாடல்களில் தென்படுகிறதே.?

குமரன் (Kumaran) said...

மதுரைக்காரரே! எனக்குத் தெரிந்தவரை நான் சௌராஷ்ட்ரத்தில் குறில் எகரம் மற்றும் ஒகரம் பயன் படுத்தியுள்ளேன். உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. வடமொழியில் குறில் எகரமும் ஒகரமும் இல்லாததால் சௌராஷ்ட்ரத்திலும் இருக்கக்கூடாது என்று எண்ணுகிறீர்கள். எனக்குத் தெரிந்த சௌராஷ்ட்ர மொழி வல்லுனர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு உங்களுக்குப் பதில் தருகிறேன்.

குமரன் (Kumaran) said...

மதுரைக்காரரே. சௌராஷ்ட்ர மொழி வல்லுனர்களிடமும் கேட்டுப் பார்த்துவிட்டேன். சௌராஷ்ட்ர நெடுங்கணக்கில் குறில் எகரமும் ஒகரமும் உண்டு என்று உறுதி செய்துவிட்டனர். மேலும் விவரம் வேண்டுமென்றால் எனக்கு kumaranmalli at yahoo dot comm எழுதுங்கள்.

Unknown said...

Anbulla Kumaran,

Nalla Paathivu. Paathai Arrinthom Payanathayum Arrinthom, annal Pullangalthaan thodanga vidammal thadukirathu.

Anbudan,
Nata

குமரன் (Kumaran) said...

புலன்கள் தடுக்கிறது என்றால் அதனையும் கண்ணனிடமே முறையிடுங்கள் நடராஜன். இல்லை என் தனி முயற்சியால் புலன்களை அடக்கிவிடுவேன் என்று முயன்றீர்களானால் அது நடப்பது மிகக் கடினம். அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்பது போல் அவன் அருளாலே தான் புலன்களை நல்வழியில் திருப்புவதும் நடக்கும். அதைப் புரிந்துகொள்ளுங்கள். அதைத்தான் கண்ணன் தன் இறுதி உபதேசமாக 'எல்லாவற்றையும் - புலன்களை என் முயற்சியால் அடக்குவேன் என்னும் கர்வம் கொண்ட எண்ணத்தையும் - விட்டுவிட்டு என்னை சரணடை. நான் எல்லா பாவங்களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன். வருந்தவேண்டாம்' என்கிறான்.

Unknown said...

Kandipaga Naan Thani Muyarchiyal Athaai Adaya muidyum endru kooravillai. "Immai Pozuthum yenn nenchil Niiengathaan" endru koori muditha adutha nodiyey,marnthu pogiroomey...antha kodumaiyay...yennavendru sollvathu...

hmm...Anbudan,
Nata

Anonymous said...

prEvu Kumaran,
'nissu' menate 'niccu' meni rhano.
'dhEy' nha 'dEy'.
Pathy.

குமரன் (Kumaran) said...

prEvu Sri K.V. Pathy ayyAnU,

tumi sange sohan mI 'nissu' menate 'niccu', 'dhEy' menate 'dEy' meni machchi likkithyO. OSS ayyAn notation mI ankun sikkunO. tyE palsAth thappu nIsthagan likkAy meni hatvaras.

prEv sentO,
Kumaran.

சௌராஷ்ட்ரம் அறியாதவர்களுக்காக...

அன்புள்ள திரு. பதி ஐயா,

நீங்கள் சொன்னபடி நான் 'nissu' என்பதை 'niccu' என்றும், 'dhEy' என்பதை 'dEy' என்றும் மாற்றி எழுதிவிட்டேன். திரு. OSS ஐயா அவர்களின் சௌராஷ்ட்ரத்தை ஆங்கிலத்தில் எழுதும் notationஐ நான் இன்னும் நன்றாய்க் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் தப்பின்றி எழுதமுடியும் என்று எண்ணுகிறேன்.

அன்புடன்,
குமரன்.

Anonymous said...

sikkulaste jukku suluv.
Pathy.

குமரன் (Kumaran) said...

mogo melli thiso lagas. ella blog patthi dinamalarum avras. tumi siyaasyaa.

For those who do not understand Sourashtram...

As you said, I also think it is easy to learn the notations to write Sourashtram in English letters. There is a mention about this blog in the Tamil Newspaper 'Dinamalar'. Have you seen this?

http://www.dinamalar.com/2005Nov08/flash.asp

குமரன் (Kumaran) said...

நன்றிகள் அனகன்.

Anonymous said...

Don't call me impudent. I just want to chip in my idea on the word 'thada bhuddhi' (liquid or running or not stagnant, bhuddhi (intelligence). Those who have thada bhuddhi are very active and highly intelligent people. People who have not confined themselves to limited ideas and dogmas. So our guru is rightly telling people to have the association of thada bhuddhi people.
Thanks
K P Subramanian
have a good day

குமரன் (Kumaran) said...

திரு. சுப்ரமணியன். நீங்கள் 'தட புத்தி - உருகிய புத்தி' என்பதற்குத் தந்துள்ள விளக்கம் புதுமையாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. என்று ஆங்கிலத்தில் சொல்லுவதைத் தான் இங்கே சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

ஆனால் இங்கே சுவாமிகள் 'பக்தியுடன் உருகிப் பாடிபவர்களை கேசவ நாமம் கரையேற்றும்' என்று இருப்பதால் பக்தியில் உருகிய மனம் என்று பொருள் கொள்வது பொருத்தமாய் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

Unknown said...

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:

அருமையான கருத்து விளக்கம்.நன்றி குமரன்

குமரன் (Kumaran) said...

நன்றி செல்வன்.

நாமக்கல் சிபி said...

//இங்கிருக்கும் எல்லோரும் இறைவனுக்குரியவர்; அதனால் எல்லோரும் என் அன்பைப் பெறத் தகுந்தவர்கள் என்னும் எண்ணம் கொள்ளவேண்டும்.//

எல்லாவிதமான பந்தங்களை விட்டுவிடுவதென்றால் என்னவென்று அருமையான விளக்கம் குமரன்.

Sivabalan said...

நீங்கள் கொடுத்துள்ள இநத பதிவில் எனக்கு ஒரு மேலாண்மை கருத்தை அறிய முடிகிறது!!

நல்ல பதிவு!!

VSK said...

ஒரு இரண்டு வரிகளில் களமைப்பு.
அடுத்த நான்கு வரிகளில் காட்சித்தொகுப்பு.
அடுத்த 10 வரிகளில் கீதையின் சாராம்சம்.
அப்படியே இரு பாடல் விளக்கங்கள்.

சும்மா, மதன் கார்ட்டூன் படம் போட்டதை நேரில் பார்த்தது போன்ற ஒரு பிரமிப்பு!

நன்றி.

மலைநாடான் said...

மகாபாரதப் பாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் அருச்சுணன்.

அனகன்,பரந்தபன்,ஆகிய பெயர்களும், விளக்கங்களும், நான் அறியாதது.

பற்று என்பதற்கான உவமைவிளக்கம் மிக அருமை. உங்கள் விளக்கத்துடன் ஒத்துவரக் கூடிய வகையில்,
'ஊரார் பிள்ளைய ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்' என்று ஈழத்தில் ஒரு முதுமொழியுண்டு

குமரன் (Kumaran) said...

நன்றி சிபி. ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதிய பதிவு இது. அந்தக் காலத்தில் எழுதிய பதிவுகளை இன்னொரு முறைப் பதிக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

சிவபாலன். என்ன மேலாண்மைக் கருத்து என்று கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா? கீதையில் மேலாண்மைக் கருத்துகள் மிக அதிகமாக இருக்கின்றன என்று படித்துள்ளேன். ஆனால் அறிந்ததில்லை.

குமரன் (Kumaran) said...

மதன் கார்ட்டூன் அவ்வளவு நன்றாகவா இருக்கும் எஸ்.கே. ஐயா? :-) ச்சும்மா.

பாராட்டுகளுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் மலைநாடான். நீங்கள் சொன்ன பழமொழி தமிழகத்திலும் உண்டு. பொருத்தமான பழமொழி.

Sivabalan said...

குமரன்,

மேலாண்மைக் கருத்தை இங்கு கூறினால் பதிவின் நோக்கம் மாறிவிடும் என்பதற்காகவே நான் கூறாமல் விட்டுவிட்டேன்.

நீங்கள் அனுமதித்தால்...

குமரன் (Kumaran) said...

சிவபாலன். பின்னூட்டங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளத் தான். சில நேரங்களில் பதிவுக்குத் தொடர்பில்லாதக் கருத்துகளும் வருகின்றன. ஆனால் அவை ஆபாசமாக இல்லாத போது அனுமதிக்கப் படுகின்றன. நீங்கள் சொல்லப்போவதோ இந்தப் பதிவிற்குத் தொடர்புள்ளக் கருத்து. அதனால் தயங்க வேண்டாம்.

சொல்ல நினைப்பதை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.

Sivabalan said...

நன்றி குமரன்,

நிச்சய்மாக தருகிறேன்!! (சிறு இடைவெலியில்)

Unknown said...

"என்னை சரணடை.உன்னை காப்பேன்"

வைணவ தருமத்தின் ஜீவநாடியே இந்த கருத்துதான்.பாரதம்,ராமாயணம் இவை திரும்ப திரும்ப சொல்வது இக்கருத்தையே.ஒரு விதத்தில் பார்த்தால் ஆன்மிகம் என்பதற்கே உயிர்நாடி இக்கருத்துதான்.

கடவுள் என்பவர் யார் என்பதற்கு இவ்வாக்கியம் அழகாக விரிவுரை தருகிறது

கடவுள் சக்தி படைத்தவனாக இருக்க வேண்டும்(சக்தி படைத்தவன் மட்டுமே காக்க முடியும்)

கடவுள் காருண்யம் கொண்டவனாக இருக்க வேண்டும்(காருண்யம் இருந்தால் மட்டுமே காக்க முடியும்.பலவானாக இருந்து காருண்யம் இல்லாவிடில் என்ன பயன்?)

இப்படி பல கருத்துக்களை தரும் இவ்வாக்கியம் வைணவ தருமத்தின் உயிர்நாடி என சொல்லுதல் மிகையாகாது

குமரன் (Kumaran) said...

செல்வன். நீங்கள் சொல்வது உண்மை. இது தான், இந்தச் சரம சுலோகம் தான் வைணவ சமயத்தின் உயிர் நாடி. இந்த சரணாகதி தத்துவத்தைப் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக ஒரு பதிவு போடுங்களேன்.

Unknown said...

கற்பு எனும் கடவுள் தொடரை இந்த தத்துவத்தை மையப்படுத்தித்தான் எழுதுகிறேன் குமரன்.இதற்குமுன் பலனை ஏற்ற கண்ணன் எனும் பதிவு கூட இதை மையப்படுத்தித்தான் எழுதினேன்.

இதன் தத்துவரீதியான விளக்கத்தை எழுத துவங்கினால் ஒரு ஆயுள் போதாது.இருப்பினும் முடிந்தவரை எழுத முயல்கிறேன்

Sivabalan said...

Pareto's Principle - The 80-20 Rulev மிக சரியாக அமைந்துள்ளது!!

80% கெட்டவர்கள் 20%நல்லவர்கள்.

நோக்கம் வாய்மையே வெல்லும்!

(இந்த நோக்கம் தான் திட்டம் (project))


முடிந்தால் இங்கேயும் போய் பாருங்க!!
http://management.about.com/cs/generalmanagement/a/Pareto081202.htm

Sivabalan said...

குமரன்,

இதுமாறி நிறைய சொல்லலாம் இந்த கதைக்கு மட்டுமே!!

குமரன் (Kumaran) said...

கற்பு தொடர் என்னவாயிற்று செல்வன்? அடுத்தப் பகுதி எப்போது வரும்?

குமரன் (Kumaran) said...

சிவபாலன். இந்த 80 - 20 விதியை அண்மையில் படித்தேன். 80 % கெட்டவர்கள் 20 % நல்லவர்கள் என்னும் வாதத்தை இப்போது தான் கேட்கிறேன். ஒத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கென்னவோ 20 % தான் நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பாகுபாடுகளுக்குள் அடங்குவர். மற்ற 80% இரண்டிலும் சேராமல் நடுவில் இருப்பவர்கள் என்று எண்ணுகிறேன். 80 - 20 விதியை உலகின் செயல்பாடுகள் பலவற்றில் காணலாம். இதனைப் பற்றியே உங்கள் பதிவில் தொடர்ந்து எழுதிக் கொண்டு வாருங்களேன். நல்ல வரவேற்பு இருக்கும் என்று எண்ணுகிறேன்.

நான் அலுவலகத்தில் என் அணியினரிடம் அடிக்கடி சொல்லுபவை:

80% வேலையை நாம் 20% நேரத்திற்குள் செய்கிறோம்; 20% வேலை செய்வதற்கு 80% நேரம் தேவைப்படுகின்றது.

80% of production issues take 20% of time to resolve; 20% of production issues take 80% of the time to resolve.

20 % மக்கள் வழிகாட்டுகிறார்கள். 80% மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

80 % அதிகாரம் 20% மக்களிடம் இருக்கிறது.

80% செல்வம் 20% மக்களிடம் இருக்கிறது.

இப்படி நிறைய சொல்லலாம். நீங்கள் கொடுத்துள்ள சுட்டியிலும் சென்று பார்க்கிறேன்.

குமரன் (Kumaran) said...

//இதுமாறி நிறைய சொல்லலாம் இந்த கதைக்கு மட்டுமே!!
//

நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் சிவபாலன்.

Unknown said...

கற்பு தொடரின் அடுத்த பகுதியை நாளையும் இறுதி பகுதியை வியாழனன்றும் இடுகிறேன் குமரன்.

80, 20 விஷயம் பல விதத்திலும் உண்மை.சந்தைபடுத்துதலிலும் 80:20 விதி உண்டு.

20% of your products will make 80% of your profits.

20% of employees will do 80% of the job.

Sivabalan said...

குமரன்,

நீங்கள் சொன்னது சரியே!!

நான் சொல்ல வந்த விசயத்தில் சற்று மாறிவிட்டேன்!!

அதை வேறு மாதிரி சொல்லியிருக்கலாம்!!

செல்வன் சார் சொல்லியிருப்பதுவும் சரியே!

குமரன்,
ஆனால் பதிவின் நோக்கம் மாறுபட்டுவிட்டதுபோல் உணர்கிறேன்!!


எனினும், மிக்க நன்றி குமரன்!!

குமரன் (Kumaran) said...

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பதிவின் நோக்கத்தைப் பற்றிய கவலை வேண்டாம் சிவபாலன். உங்களுக்கு அது முக்கியமாகத் தோன்றினால் தனிப்பதிவு போட்டு எழுதத் தொடங்குங்கள். அங்கு தொடர்வோம்.

(எப்படியும் உங்களை எழுத வைத்துவிடுவது என்று முடிவு செய்துள்ளேன். ) :-)

குமரன் (Kumaran) said...

சிவபாலன். என்ன இது? உங்கள் பதிவிற்கு வரும் வழியை அடைத்துவிட்டீர்கள்? ஏன்?