Tuesday, July 04, 2006

செய்த பாவங்கள் தான் எத்தனை எத்தனை....

அடியேன் செய்த பாவங்கள் தான் எத்தனை எத்தனை? சொல்லி முடியுமா? புல்லாகிப் பூண்டாகி பல மிருகங்களாகி கல்லாய் மனிதராய் தேவராய் கணங்களாய் வல்லசுரராய் பற்பல பிறவிகள் எடுத்து அவற்றில் செய்த புண்ணிய பாவங்கள் தான் எத்தனை எத்தனை? அவற்றிற்கேற்ப பரிசும் தண்டனையும் தருவதற்காக நீதி தேவனாய் அமர்ந்திருக்கும் யமதருமராஜனைக் கண்டால் எனக்குப் பயமாகத் தான் இருக்கிறது. நன்மைகள் தான் மிகுதியாகச் செய்திருக்கிறேன் என்று மிகத் தெளிவாகத் தெரிந்தால் நமக்குப் பரிசு மட்டுமே கிடைக்கும் என்று தைரியமாகக் கலங்காமல் இருக்கலாம். ஆனால் தெளிவாகத் தெரிகிறதே பற்பல பிறவிகளிலும் செய்தவை பாவங்கள் மட்டுமே என்று. எத்தனை விதமான பாவங்கள் இருக்கின்றனவோ அத்தனையும் தவறாமல் செய்திருப்பேன் போலிருக்கிறதே. தப்பை தப்பு இல்லாமல் செய்தாலும் தப்பு தப்பு தானே? அவற்றிற்கான பலன் கிடைக்கத் தானே செய்யும்? எத்தனையோ குற்றங்களைச் செய்தும் அவற்றை வெளியே தெரியாமல் செய்துவிட்டதால் நான் நல்லவன் ஆகிவிடமுடியுமா? அப்படியிருக்கும் போது தண்டனை தருவதற்காகக் காத்திருக்கும் யமனைக் கண்டால் நான் நடுங்குவது இயற்கை தானே!

பெருமாளே. உன் கருணையினால் உன் அருட்பார்வை என் மேல் விழுந்தது. உன்னை அறிந்து கொண்டேன். உன் அருளாலேயே நான் செய்த புண்ணிய பாவ வினைகளின் பயன்களில் இருந்து தப்ப முடியும் என்று அறிந்து கொண்டேன். அதனால் உனக்கு ஆளானேன். உன் அடியாரில் ஒருவனானேன்.

ஆனாலும் இன்னும் ஒரு பயம் இருக்கிறது. நீயும் பாரபட்சம் இல்லாதவன் அன்றோ? உன் கட்டளையின் பேரில் அன்றோ யமதருமராஜன் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறான். கீழ் நீதிமன்றத்திலிருந்து தப்புவதற்கு யாராவது மேல் நீதிமன்றத்தில் சரணடைவார்களா? கீழ் நீதிமன்றத்தில் தந்த தண்டனைக்கு வேண்டுமானால் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். அங்கும் குற்றம் செய்யாமல் இருந்தால் தான் தண்டனையை விலக்குவார்கள். குற்றம் செய்தது தெளிவாகத் தெரிந்தால் கீழ் நீதிமன்றம் கொடுத்தத் தண்டனையையே மேல் நீதிமன்றமும் கொடுக்குமே?! அப்படியிருக்க யமதருமராஜனுக்குப் பயந்து உன்னிடம் வந்து சேர்வது சரியா?

கட்டாயம் சரிதான் என்று உன்னை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். ஏதும் தர நிற்கும் கருணைக்கடல் அன்னை என்றும் உன் மார்பில் இருக்கும் போது என்ன குறை எனக்கு இருக்க முடியும்? நீ நீதிமானாக இருந்து 'இவன் பாவம் செய்தவன்' என்று என்னைத் தள்ளினாலும் 'இவன் பாவம் செய்தவனாக இருக்கலாம். ஆனால் தற்போது உங்களிடம் சரணடைந்திருக்கிறானே. அவன் நம் குழந்தையன்றோ? குற்றம் செய்தவனேயாகிலும் நம் குழந்தையாதலால் அவனைத் தள்ளத் தகுமோ?' என்று பலவாறாக எனக்காகப் பரிந்து பேசுவாளே அன்னை திருமகள். அவள் உன் அருகில் இருந்து எனக்காகப் பரிந்துரைப்பதைத் தானே, ச்ரியானவள் உன் பாரிசத்தில் (பக்கத்தில்) இருந்து பரிந்துரைப்பதைத் தானே, ச்ரிபாரிசம் - சிபாரிசு என்று சொல்கிறார்கள். அவள் சிபாரிசு இருப்பதால் தந்தையான நீயும் என்னைத் தள்ளாமல் கொள்வாய் என்ற நம்பிக்கை இருக்கிறது.

த3ணா லைடா3 ஹாத் எமாக் த4க்கி மீ தொகொ ஹொயேஸ்

தண்டத்தை கையில் தாங்கியிருக்கும் யமனுக்குப் பயந்து நான் உன் அடியவன் ஆனேன்

மொந்நு தொ2வி ஸ்ரீ லக்ஷ்மிதே3வி ஸெர தூ நிக்ளி ஸெணமவி ஸேவதீ3 ஸெரிர் வெக்ள கெரி தொர ஸெர மிள்விலேத் ஸீன் திரயி

நீ மனம் உவந்து திருமகள் உடன் சேர்ந்து கிளம்பி விரைவில் வந்து எனக்குக் காட்சி கொடுத்து என் உடலைத் தூய்மையாக்கி உன்னுடன் சேர்த்துக் கொண்டால் என் இளைப்புகள் தீரும்.

***

'விரைவில் வந்து காட்சி தருவாய்' என்றத் தலைப்பில் சிவமுருகன் இட்டப் பதிவில் இருக்கும் நாயகி சுவாமிகளின் பாட்டின் அனுபல்லவியை விளக்கும் பதிவு இது. பல்லவி விளக்கப்பட்டப் பதிவு இங்கே இருக்கிறது.

23 comments:

Machi said...

பாட்டு சங்கதமா இல்லை சௌராஷ்டிரமா?

//கீழ் நீதிமன்றத்திலிருந்து தப்புவதற்கு யாராவது மேல் நீதிமன்றத்தில் சரணடைவார்களா? கீழ் நீதிமன்றத்தில் தந்த தண்டனைக்கு வேண்டுமானால் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். அங்கும் குற்றம் செய்யாமல் இருந்தால் தான் தண்டனையை விலக்குவார்கள். குற்றம் செய்தது தெளிவாகத் தெரிந்தால் கீழ் நீதிமன்றம் கொடுத்தத் தண்டனையையே மேல் நீதிமன்றமும் கொடுக்குமே?! //

தவறு யார் நியாய அநியாயம் பார்த்து தீர்ப்பு கூறுகிறார்கள்? . நீதிமன்றத்தில் வழக்குரைனர்களின் வாத திறமையாலும் அல்லது அவர்களுக்கு நீதிபதிகளிடம் இருக்கும் செல்வாக்கின் காரணமாகவே சாதகமான தீர்ப்பை பெற இயலும் . இங்கு மேல் நீதிமன்றதில் திருமகள் நம் பக்கம் இருப்பதால் நீதிமான் திருமகன் நம் பாவங்களை மன்னித்து நமக்கு அருள் புரிவான்.

//அவன் நம் குழந்தையன்றோ? குற்றம் செய்தவனேயாகிலும் நம் குழந்தையாதலால் அவனைத் தள்ளத் தகுமோ?' என்று பலவாறாக எனக்காகப் பரிந்து பேசுவாளே அன்னை திருமகள்.//

சரியாக சொன்னீர்கள்.
திருமகள் கருணை நிறைந்தவள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

கீழ் நீதிமன்றத்தில் தந்த தண்டனைக்கு வேண்டுமானால் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாம். அங்கும் குற்றம் செய்யாமல் இருந்தால் தான் தண்டனையை விலக்குவார்கள். குற்றம் செய்தது தெளிவாகத் தெரிந்தால் கீழ் நீதிமன்றம் கொடுத்தத் தண்டனையையே மேல் நீதிமன்றமும் கொடுக்குமே?!

நன்றாகச்சொன்னீர்கள்.ஆனால் 'வாரன்ட்' இல்லாமல் காவலர் யாரையும் கைதுசெய்ய முடியாது. வாரன்ட் இருந்தாலும் முன் ஜாமீன் பெற்ற ஒருவனைக் கைது செய்ய முடியாது மீறி கைது செய்தால் காவலர் கதை கந்தலாகிவிடும். மார்கண்டேயர் யமன் கதை நல்ல உதாரணம். பரமனின் பாதகமல்ங்களை வேறு பற்றில்லாமல் பற்றுபவனுக்கு.முன் ஜாமீன் கிடைக்கும். மரணபயத்தை வென்று விடலாம். பண்ணின பாவாங்கள் எத்தனையோ அந்த பரமனுக்கே தெரியும். இதில் எண்ணிக்கை குறைந்தாலும் அது அந்த இறைவனுக்கே தெரியும்.நல்ல பாடல் நல்ல விள்க்கம். அன்பன் தி ரா ச

கோவி.கண்ணன் said...

//நீ மனம் உவந்து திருமகள் உடன் சேர்ந்து கிளம்பி விரைவில் வந்து எனக்குக் காட்சி கொடுத்து என் உடலைத் தூய்மையாக்கி உன்னுடன் சேர்த்துக் கொண்டால் என் இளைப்புகள் தீரும்//

கர்ம வினையால் மீண்டும் மீண்டும் பிறப்பு இருக்கட்டம் ... முதல் பிறப்பு எந்த கர்ம வினையால் ஏற்பட்டது ?... குமரன் அவர்களே விளக்குவீர்களா ?

குமரன் (Kumaran) said...

கோவி. கண்ணன். நல்ல கேள்வி. விடை தெரியாது. :-)

இந்து மதத் தத்துவங்கள் அனைத்தும் (நான் படித்து அறிந்தவரை) கர்மவினையை அநாதி என்று தான் சொல்லுகின்றன. எல்லாத் தத்துவங்களிலும் (நான் படித்தவரை) இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது; ஆனால் எதுவுமே விடை சொல்லவில்லை.

கர்மவினைப்பயனாய் பிறப்பிறப்புகள், இன்பதுன்பங்கள் வருகின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது. அதற்கு மருந்தாய் இறைவனின் கருணை அனுபூதியாளர்களால் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்விதம் இருக்க கர்மவினையும் அதன் பலனாய் பிறவியும் முதன்முதலில் எப்படித் தோன்றியது என்று விவாதிப்பது முட்டையிலிருந்து கோழி; கோழியிலிருந்து முட்டை என்ற ஆராய்ச்சியைப் போன்றது என்று தான் அந்தத் தத்துவங்கள் சொல்கின்றன.

இது ஒரு வித எஸ்கேபிசம் போல் தோன்றினாலும் இது தான் இதுவரை நான் படித்தவரை அறிந்தது. அனுபூதிமான் இல்லை நான். அதனால் இதற்கு விடை என்னுள்ளேயே இன்னும் எழவில்லை. அதனால் உங்கள் கேள்விக்கு விடை தெரியாது என்பது தான் உண்மை.

கோவி.கண்ணன் said...

//உங்கள் கேள்விக்கு விடை தெரியாது என்பது தான் உண்மை.//
இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின் எந்த நம்பிக்கையில் 'உன்னுடன் சேர்த்துக் கொண்டால் என் இளைப்புகள் தீரும்' என்பது நம்பிக்கை மோ(ட்)சமா ?

திரு ஞான வெட்டியான் அவர்களிடம் கேட்டேன் அவரும் பிறவிகளை கடக்க முடியாது என்கிறார்

குமரன் (Kumaran) said...

இறைவன் அருளால் பிறவிப் பெருங்கடலைத் தாண்டலாம் என்பது அனுபூதிமான்கள் சொன்னது. அதனை நம்புவது அவரவர் விருப்பம்; இல்லையா கோவி.கண்ணன்?

உங்களிடம் ஏதோ ஒரு பதிலைச் சொல்லி மழுப்பாமல் எனக்குத் தெரிந்ததைத் தான் சொல்கிறேன். எனக்குத் தெரிந்தது ஒன்று என் அனுபவத்தில் வந்திருக்கவேண்டும்; இல்லை அனுபூதிமான்கள் சொன்னதைப் படித்தோ கேட்டோ தெரிந்து கொண்டிருக்கவேண்டும். இரண்டுவிதமாகவும் உங்கள் கேள்விக்கு விடை என்னிடம் இல்லை; அதனையே சொன்னேன். அதற்குப் பொருள் உங்கள் கேள்விக்கு விடையே இல்லை என்பது இல்லை. விடை இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.

இந்தக் கேள்விக்கு விடை தெரிந்தால் தான் இறைவனிடம் சேர்ந்தால் என் இளைப்பு தீரும் என்பதிலும் நான் நம்பிக்கை கொள்வேன் என்று சொல்வது உங்கள் உரிமை; அப்படி விடை கிடைக்காமல் நம்புவது நம்பிக்கை மோசம் என்று சொல்வதும் உங்கள் உரிமை. என் உரிமை? சொல்லவும் வேண்டுமா? :-) 'நம்பினோர் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு' என்று சொல்லிவிட்டு நம்பிக்கைக் கொண்டு அதில் வருவதைப் பார்த்திருப்பது. :-)

குமரன் (Kumaran) said...

குறும்பன். இந்தப் பாடல் சௌராஷ்ட்ரப் பாடல். சங்கதம் (சமஸ்கிருதம், வடமொழி) இல்லை.

உண்மை தான் குறும்பன். யார் நமக்காக வாதிடுகிறார்கள் என்பதும் மிக முக்கியம். ஒரு வேறுபாடு உண்டு. என்ன தான் திருமகளே நமக்காக வாதிட்டாலும் நாம் அவர்கள் இருவரிடமும் செய்த சரணாகதியில் முழுமை இருக்கவேண்டும். அப்படி இல்லாமலும் அவர்களிடம் மன்னிப்பு பெற்றபின்னும் அதே குற்றங்களைச் செய்து கொண்டிருப்பதும் பெற்றோர்களின் (ஜகன்மாதாபிதாக்களின்) கோபத்தை நம் மேல் அதிகப்படுத்தும். அதனால் சரணடையும் போதே இனி மேல் அந்தத் தவறுகளைச் செய்யப்போவதில்லை என்று உறுதி ஏற்றுக் கொண்டு மனமறிந்து அந்தத் தவறுகளைச் செய்யக் கூடாது.

குமரன் (Kumaran) said...

நன்றி தி.ரா.ச. வாரன்ட், முன் ஜாமீன் என்று அழகாகச் சொன்னீர்கள். 'அப்போதைக்கிப்போதே சொல்லிவைத்தேன்' என்று பெரியாழ்வார் பாடியது தான் நினைவிற்கு வந்தது உங்கள் கருத்தைப் படித்த போது. :-)

கோவி.கண்ணன் said...

//
இரண்டுவிதமாகவும் உங்கள் கேள்விக்கு விடை என்னிடம் இல்லை; அதனையே சொன்னேன். அதற்குப் பொருள் உங்கள் கேள்விக்கு விடையே இல்லை என்பது இல்லை. விடை இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை.
//
சரி சரி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். சுவாமி விவேக நந்தரின் ஞான யோகம் எப்போதோ படித்திருக்கிறேன். அதில் அவர் இந்த பிரபஞ்சம் ஒரு முடிவற்ற சுழற்சி என்கிறார். அதாவது பிரபஞ்சத்தின் விரிவு அதில் உலகங்கள் தோன்றுதல், பிரபஞ்சத்தின் அமுக்கம் உலகங்கள் அமிழ்தல். இவையே மாறி மாறி நடக்கின்றன. அப்படி விரிவடையும் போது முன்பு இருந்த அதே நிகழ்வுகள், தோற்றங்கள் அப்படியே திரும்ப வரும். இது திரும்ப திரும்ப ஒரெ எல்லையூடான சம கால அளவுகளில் முடிவற்று எப்போதும் நடந்தது நடக்கிறது நடக்கும். இதையே பகவத் கீதையும் 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கும் என்று உறுதியோடு சொல்கிறது. பிறவிகள் ... துன்பங்கள் ... எல்லாம் ... நாம் காணும் மாயத் தோற்றங்கள். அப்போது நடந்ததே இப்போதும் நடக்கிறது... திரும்பவம் நடக்கும் ... பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக இருப்பினும் இக்கருத்து நான் ஏற்றுக் கொள்ளும் கருத்து. *இந்த சூழலில் இதையே நான் எப்போதும் எழுதுகிறேன்*

சிவமுருகன் said...

//தப்பை தப்பு இல்லாமல் செய்தாலும் தப்பு தப்பு தானே?//

அண்ணா,
இவ்வரிகள் அருமை.

//ஆனால் தற்போது உங்களிடம் சரணடைந்திருக்கிறானே. அவன் நம் குழந்தையன்றோ? குற்றம் செய்தவனேயாகிலும் நம் குழந்தையாதலால் அவனைத் தள்ளத் தகுமோ?' என்று பலவாறாக எனக்காகப் பரிந்து பேசுவாளே அன்னை திருமகள்.//

அதற்க்கு தானே அவளையும் சேர்த்து, வணங்குகின்றனர் (வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு).

ENNAR said...

வழக்கு மன்றம்
நீதிபதி:
என்ன எமதர்மராஜனே உனது பிராது?
எ.த.ரா:
கனம் நீதிபதி அவர்களே இதோ எதிரில் நிற்கும் சிவனாகப் பட்டவர் நான் எனது கடமையை செய்ய முற்பட்டபோது அதவது 16 வயது முடிந்த மார்கண்டேணின் உயிரை எடுக்க எனது பாசக் கயிற்றை வீசும் போது எனது கடமையை செய்யவிடாமல் தடுத்த இவர் மீது தேவலோக தண்டணைச் சட்டப்படி தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நீதிபதி:
என்ன கயிலைநாதா உமது பதில்.
சிவன்:
கனம் நீதிபதியவர்களே நான் எப்படித்தடுத்தேன் என்று சொல்லவில்லையே?
எ.த.ரா:
கனம் நீதிபதியவர்களே என்னை இச்சிவனானவர் தனது இடது காலால் உதைத்தார் எனது கடமையையும் செய்யவிடாமல் தடுத்தார். இது தான் எனது பிராது கனம் கோர்ட்டார் அவர்களே.
சிவன்:
மை லார்ட் நான் எனது இடது காலால் உதைத்ததாகச் சொன்னார் எனது உடம்பில்பாதி எனது மனைவி சக்தியின் காலாகும் ஆகவே நான் உதைக்க வில்லை அம்மையாரை விசாரணை செய்து கொள்ளுங்கள்.
டபேதார்:
பராசக்தி பராசக்தி பராசக்தி
சக்தி: மை லார்ட் எமதர்மன் எல்லரோரையும் பிடித்து தண்டிப்போம் என்ற மமதையில் அதிகாரத்தில் எனது கணவர் மேலேயே பாசக்கயிற்றை வீனால் நான் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா யிருப்பேனா!! அதான் உதைத்தேன்.
எந்த பொம்பளை ஆம்படையானை ஒருவன் பிடிக்க அடிக்க வந்தால் சும்மா யிருப்பாள் கோபம் கொண்டு எழ மாட்டாளா? அவருக்கு மார்கண்டேயன் தான் வேண்டும் என்றால் அவனை தனியாக பிடிக்க வேண்டியது தானே எனது ஆம்படையான் மேல் ஏன் கயிற்றை போட வேண்டும்.
எ.த.ரா:
கனம் நீதிபதியவர்களே நான் என்னமோ கயிற்றைப் போட்டது சிறுவன் மேல்தான் ஆனால் கயற் சிவலிங்கத்தின் மேலும் விழுந்து வி்ட்டது.
நீதிபதி:
இருவர் வாதத்தையம் கேட்டபொழுது ஒரு உண்மை தெரியவருகிறது. எமன் போட்ட கயற் தனது கணவர் மேல் விழுந்ததால் கோபமே தனது உடைமையாக கொண்டு பராசக்தி உதைத்து விட்டார் இது குற்றமல்ல வழக்கை தள்ளுபடி செய்கிறேன்

தி. ரா. ச.(T.R.C.) said...

என்னார் அவர்களே நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.எந்த மனைவியும் அவர்களே இரண்டு "தாமரைக்கனி தட்டு" தட்டுவார்களே தவிர வேறு ஒருவன் தங்கள் கணவனை தட்டுவதைப் பொறுத்க்கொள்ள மாட்டார்கள் அந்த அளவுக்கு பதிபக்தி மிக்கவர்கள் தி ரா ச

குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. தங்கள் கருத்திற்கு நன்றி. நானும் நீங்கள் சொல்லும் கருத்தினைப் படித்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவமுருகன். நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போகும் போது அம்மையை முதலில் வணங்கிவிட்டுத் தானே சிவபெருமானை வணங்கச் செல்வோம். அந்தப் பழக்கம் சிவாலயங்களில் மதுரையில் மட்டுமே உண்டு. ஆனால் பெருமாள் கோவில்களில் தாயாரை முதலில் வணங்கிவிட்டுத் தான் பெருமாளை வணங்குவார்கள். அதுவே மரபு. தாயாரிடம் முதலில் சரணடைந்துவிட்டு அவருடைய பரிந்துரையுடன் பெருமாளிடம் செல்கின்றோம்.

குமரன் (Kumaran) said...

என்னார் ஐயா. ஒரு நல்ல வழக்கினை நடத்திக் கொடுத்திருக்கிறீர்கள். சுவையான நாடகம் அது. இதற்கு முன்னரும் இதனைப் படித்திருக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

உண்மை தி.ரா.ச. எல்லாம் அனுபவம் பேசுகிறது. :-) என் அனுபவத்தைச் சொன்னேன். :-)

நாமக்கல் சிபி said...

//கர்ம வினையால் மீண்டும் மீண்டும் பிறப்பு இருக்கட்டம் ... முதல் பிறப்பு எந்த கர்ம வினையால் ஏற்பட்டது ?... குமரன் அவர்களே விளக்குவீர்களா ?
//

இதற்ற்கு விடை கண்டுவிட்டால் மறுபிறப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.

விடை காணும் அளவுக்கு முக்தி பெறவேண்டும். முக்தி பெற முயற்சிக்கும்போதே நாம் பாவம் செய்தலை அறவே ஒதுக்குகிறோம். பற்றினை ஒதுக்குகிறோம். பந்த பாசங்கள், பற்று இல்லாவிடில் பொருளாசை குறைகிறது. பொருளாசை குறையும்போது குற்றங்கள் குறைகின்றன.
குற்றங்கள் குறையும்போது பயம் குறைகிறது. பாவங்கள் குறைகின்றன.

பயம் குறையும்போது மனதில் அமைதி மேலோங்குகிறது. அமைதி இருக்கும்போது கருணை பிறக்கிறது. கருணை இருந்துவிட்டால் பிறர்மேல்/பிற உயிர்கள் மேல் பற்றில்லாமல் நேசம் உருவாகிறது.

கருணையும், அமைதியும் இருக்கும் இடத்தில் தெளிவும் தேடல்களுக்கான விடையும் கிடைக்கிறது. தேடல்களுக்கான விடை கிடைத்துவிட்டால் அதுவே முக்தி எனப்படுகிறது. முக்தி அடைந்தவர்களை இறைவன் மீண்டும் மீண்டும் உலக வாழ்வில் துன்பப்படுத்த விரும்புவதில்லை. அவனே ஆட்கொள்கிறான். எனவே மறுபிறவி இருப்பதில்லை.

நாமக்கல் சிபி said...

என்னார் அவர்களே,
அன்னையைச் சரணடைதலின் பயனை அருமையான நாடகத்தின் மூலம் விளக்கி உள்ளீர்கள்.

நாமக்கல் சிபி said...

//என் அனுபவத்தைச் சொன்னேன். :-)
//

புரிகிறது குமரன்.

G.Ragavan said...

// கோவி.கண்ணன் said...
//உங்கள் கேள்விக்கு விடை தெரியாது என்பது தான் உண்மை.//
இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பின் எந்த நம்பிக்கையில் 'உன்னுடன் சேர்த்துக் கொண்டால் என் இளைப்புகள் தீரும்' என்பது நம்பிக்கை மோ(ட்)சமா ?

திரு ஞான வெட்டியான் அவர்களிடம் கேட்டேன் அவரும் பிறவிகளை கடக்க முடியாது என்கிறார் //

நிச்சயம் முடியும் கோவி. பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர் என்கிறதே வள்ளுவமும்.

இறையருளால் கைகூடாதது எது? செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் என்கிறார் அருணகிரி. ஆக இறையருள் இருந்தால் பிறவிக்கடல் தீரும் என்பதே உண்மை.

இதற்கு வாரியார் சொன்ன எ.கா ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். கல் மிதக்குமா? மிதக்கும். எப்படி? கடலில் போட்டால் அமிழ்ந்து போகிற கல்லானது ஒரு பலகையின் மீது வைத்தால் மிதக்கும் அல்லவா. ஆக கடவில் விழுந்தால் மூழ்கும் கடலானது பலகையைப் பற்றி கரை காண்பது போல, பிறவிப் பெருங்கடலில் விழுந்தால் மூழ்கும் மனிதப் பிறப்பானது இறைவன் திருவடியைப் பற்றினால் கரை காணும் என்பதே உண்மை.

தி. ரா. ச.(T.R.C.) said...

என் அனுபவம் என்னார் அனுபவம் எல்லார் அன்பவமும் ஒன்றுதான் இந்த விஷயத்தில் தி ரா ச

குமரன் (Kumaran) said...

சிபி. தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

//
பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர் என்கிறதே வள்ளுவமும்.
//
திரு ராகவன் நீங்கள் சொல்லும் விளக்கம் என்பது பக்தி இலக்கியங்களில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை சார்ந்தது. அதைப் பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை. நான் கேட்டதே 'பெருங்கடலில் முதன் முதலில் எப்படி விழுந்தோம் ?' என்பது தான்